

புதுடெல்லி: கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை ஹரித்துவாரில் தரம்சன்ஸத் என்ற பெயரில் சாதுக்கள் கூடி தர்ம சபை நடத்தினர். இதில், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் சாதுக்கள் பேசி யுள்ளனர். இதில், மதம் மாறிய ஷியா பிரிவு முஸ்லிமான வசீம் ரிஜ்வீ என்ற ஜிதேந்திரா நாராயண் சிங் திவாரியும் உரையாற்றினார். இந்த சம்பவத்தில் ஹரித்துவாரின் நீதிமன்ற தலையீட்டின் பேரில் உத்தராகண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் ரிஜ்வீயுடன், சாதுக்கள் நரசிங்கானந்த் சரஸ்வதி, சாத்வீ அன்னபூர்ணா பார்தி என்ற ழைக்கப்படும் பூஜா சகூன் பாண்டே, சாகர் சிந்து மஹராஜ் மற்றும் தரம்தாஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களில் தரம்சன்ஸத்தின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, வசீம் ரிஜ்வீ மட்டும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து தர்ம சபையின் முக்கிய அமைப்பாளர் நரசிங்கானந்த் சரஸ்வதி காலவரையற்ற உண்ணா விரதம் தொடங்கினார். பிறகு, அவரும் கைது செய்யப்பட்டார். அத்துடன், முஸ்லிம் பெண்களை இழிவாக பேசியதாக அவர் மீது தனி வழக்கு பதிவாகி உள்ளது.
இதை கண்டித்து ஹரித்து வாரில் 2,000-க்கும் மேற்பட்ட சாதுக்கள், ஆர்ப்பாட்டம் தொடங்கி உள்ளனர். இது குறித்து சாது கிருபா தாஸ் கூறும்போது, ‘‘தரம்சன்ஸத்தின் மேடையில் பேசியவர்கள் மீதான வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிடில் பிரயாக்ராஜின் அலகாபாத்தில் மிகப்பெரிய சாதுக்கள் சபை கூட்டி பாஜக.வை தேர்தலில் தோல்வியுற செய்ய பொதுமக்களிடம் வலியுறுத்து வோம்’’ என்றார்.