

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.58 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் 225 நாட்களில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,738 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டதால், ஒட்டுமொத்த பாதிப்பு 8,209 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,738 பேரும்,அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 1672 பேரும், ராஜஸ்தானில் 1276 பேரும், டெல்லியில் 549 பேரும், கர்நாடகாவில் 548 பேரும், கேரளாவில் 536 பேரும் பாதிக்கப்பட்டனர்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 16 லட்சத்து 56 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 385 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 86 ஆயிரத்து 451ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 461 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 157.20 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பாதிப்பில் கரோனாவில் சிகிச்சையில் இருப்போர் 4.43 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 94.27 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டு புதிதாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 964 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது