

புதுடெல்லி : இந்தியாவில் உள்ள முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வர்களின் சொத்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பள்ளிக் கல்வி, உயர்கல்விக்குச் செலவுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ஆக்ஸ்ஃபாம் இந்தியா வெளியி்ட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் கோடீஸ்வர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்து 142 ஆக அதிகரி்த்துள்ளது, பலரின் சொத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் 10 சதவீதம் பேருக்கு வெறும் ஒரு சதவீதம் வரி மட்டும் கூடுதலாக விதித்தால், நாட்டில் பெருந்தொற்று காலத்தில் கூடுதலாக 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும்.
98 சதவீத கோடீஸ்வர குடும்பங்களுக்கு சொத்துவரி விதித்தால், மத்திய அரசின் மிகப்பெரிய காப்பீடுதிட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குத் தேவையான நிதியை அடுத்த 7 ஆண்டுகளுக்கு வழங்க முடியும்.
சொத்துக்களில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. 142 கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு ரூ.53 லட்சம் கோடிக்கும் மேலாக(71900கோடி டாலர்) அதிகரித்துள்ளது. 98 கோடீஸ்வரர்கள் நாட்டில் உள்ள 40 சதவீதமக்கள் அதாவது 55.5 கோடிமக்களின் சொத்துக்களுக்கு இணையாக வைத்துள்ளனர். அதாவது ரூ.49லட்சம் கோடி(65700 கோடிடாலர்).
முதல் 10 இடங்களில் உள்ள கோடீஸ்வர்ரகள் ஒவ்வொருவரும் நாள்தோறும் 10 லட்சம் டாலர்(ரூ.7.41கோடி) செலவு செய்தாலும் அவர்களின் சொத்துக்களை முழுவதும் செலவழித்து முடிக்க 84 ஆண்டுகள் ஆகும்.
இந்த 142 கோடீஸ்வரர்களுக்கு ஆண்டு சொத்துவரி விதித்தால், ஆண்டுக்கு 7,830 கோடி டாலர் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும். அதாவது, மத்திய அரசின் சுகாதாரத்துக்கான செலவுக்கான தொகையை 271 சதவீதம் உயர்த்த முடியும்.
இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்களிடம்தான் தேசத்தின் 45 சதவீத சொத்துக்கள் இருக்கின்றன, மற்ற 50 சதவீத மக்களிடம் வெறும்6 சதவீதம் சொத்துக்கள் உள்ளன.
மத்திய அரசால் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு போதுமான அளவு செலவு செய்ய முடியாததால்தான், தனியார் மருத்துவமனைகள், கல்விநிலையங்கள் அதிகரித்துள்ளன. வருவாயை அதிகப்படுத்தவும், வரிவிதிப்பில் முற்போக்கான முறையையும், கோடீஸ்வர்களின் சொத்துக்களை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி, சுகாதாரம், சமூகபாதுகாப்புக்கு அதிகமான அரசு நிதியை திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் சமத்துவமின்மையை குறைக்க முடியும், இந்த துறைகளை தனியார்மயமாக்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .
இந்தியாவில் மிகப்பெரும் கோடீஸ்வரர்களுக்கு சொத்து வரியை மீண்டும் விதித்து, அல்லதுபுதிய வரியை விதித்து வருவாயைப் பெருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டின் கல்வி, சுகாதாரம், ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதற்காக கோடீஸ்வரர்களிடம் தற்காலிகமாக ஒரு சதவீதம் மட்டும் வரி மட்டும் விதிக்கலாம்.
பாலின சமத்துவமின்மை குறித்து கூறுகையில் இந்தியாவில் பெருந்தொற்று காலத்தில் வேலையிழப்பை சந்தித்ததில் 28 சதவீதம் பெண்கள், வருமானம் இழப்பில் மூன்றில் 2 பங்கு பெண்கள் இழந்துள்ளனர்.
இந்தியக் கோடீஸ்வர்களில் கடைசி 10 இடங்களில் இருப்பவர்களின் சொத்துக்களின் மதிப்பில் பாதி்க்கும் குறைவான தொகையைத்தான் மத்திய அரசு ஆண்டு பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது. இந்த கோடீஸ்வர்களின் மீது 2 சதவீதம் வரி விதித்தால், ரூ.10 கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம், பட்ஜெட் ஒதுக்கீடு இந்தத்துறைக்கு 121 சதவீதம் அதிகரிக்கும்.
இந்தியாவில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் சொத்துக்களை வைத்து, தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்துக்கும், மகளிர் சுய உதவிக்குழுவுக்கும் அடுத்த 365 ஆண்டுகளுக்கு நிதியுதவி செய்ய முடியும்.
சுகாதார சமத்துவமின்மை குறித்து கூறுகையில் இந்தியாவில் 98 கோடீஸ்வர குடும்பங்களுக்கு 4 சதவீதம் சொத்துவரி விதித்தால், அடுத்த 2 ஆண்டுகளுக்கும் அதிகமாக மத்திய சுகாதார குடும்பநலத்துறைக்கு நிதி வழங்க முடியும். இந்த 98 கோடீஸ்வர்களின் ஒட்டுமொத்த சொத்து மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பைவிட 41 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
கல்வியில் சமத்துவமின்மை குறித்து ஆய்வில், 98 கோடீஸ்வர்களின் மீது ஒரு சதவீதம் வரி விதித்தால், மத்திய கல்வித்துறைக்குதேவையான ஆண்டுச் செலவை சமாளிக்க மடுியும். 4 சதவீதம் வரி விதித்தால், மதிய உணவுத் திட்டத்துக்கு தேவையான நிதியை அடுத்த 17 ஆண்டுகளுக்கு வழங்கலாம், அல்லது சம்ஹாரா சிக்ஸயா அபியான் திட்டத்துக்கு 6ஆண்டுகளுக்கு நிதி வழங்க முடியும்.
4 சதவீதம் வரி விதித்தால் மிஷன் போஷான்2.0 திட்டத்துக்கு போதுமான நிதியையும், போஷான் அபியான், வயதுவந்த பெண் குழந்தைகள் திட்டம், அங்கன்வாடி திட்டம் ஆகியவற்றுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதி வழங்கிட முடியும்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது