

மும்பை: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ட்விட்டரில் தமிழ் வார்த்தையான `போடா டேய்' குறித்து வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் சுவாரசியமான தகவல்களை பதிவிடுவார். அந்தப் பதிவுகள் பலமுறை வைரலாகும். அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தமிழ் மொழி அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், "நீங்கள் கூறும் கருத்தை கேட்பதற்கும், உங்களது விளக்கத்தை புரிந்து கொள்ளவும் எனக்கு நேரம் இல்லை. எனக்கு தனிமை தேவைப்படுகிறது. என்னை தொந்தரவு செய்யாமல் விட்டால், உங்களை நிச்சயம் பாராட்டுவேன் என்ற வாக்கியங் களை ஆங்கிலத்தில் கூறுவதற்கு இணையான தமிழ் வாக்கியம்: போடா டேய்" என்று பதிவிட் டுள்ளார்.
அத்துடன், “நான் தமிழகத்தில் பள்ளிப் படிப்பை படித்தேன். அப்போது நான் கற்ற முதல் வார்த்தை `போடா டேய்' என்பதுதான். இந்த வார்த்தையை எனது வாழ்க்கையில் பலமுறை பயன்படுத்தி இருக்கிறேன். சில முறை சத்தமாகவும், பல முறை மெதுவாகவும்” என்று குறிப்பிட்டிருந்தார். தமிழைப் பற்றிய ஆனந்த் மஹிந்திராவின் இப்பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரைப் பின்பற்றும் பலரும் தங்களது தாய் மொழியில் இதேபோன்ற அர்த்தம் உள்ள வாசகங்களை வெளியிட்டு பதிலாக பகிர்ந்துள்ளனர்.