Published : 17 Jan 2022 06:37 AM
Last Updated : 17 Jan 2022 06:37 AM

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபனின்: பள்ளிகொண்டபுரம் நாவல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு

நீல பத்மநாபன்

திருவனந்தபுரம்: சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். ‘இலை உதிர்காலம்’ என்னும் நாவலுக்காக கடந்த 2007-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரின் பள்ளிகொண்டபுரம் என்னும் நாவல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 1970-ம் ஆண்டு வெளிவந்தபள்ளிகொண்டபுரம் நாவல் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இதேபோல் நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் இந்தி, மலையாளம், உருது, பஞ்சாபி, மராத்தி,குஜராத்தி, தெலுங்கு, ஒரியா, வங்கம், ஆஸாமீஸ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

திருவனந்தபுரத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்நாவலை டாக்டர்லூபா பைச்சினா என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

20 நாவல்கள், 10 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆங்கிலக் கட்டுரைகள், பத்துக்கும் அதிகமான சிறுகதைத் தொகுப்புகள் என எழுதிக் குவித்திருக்கும் நீல பத்மநாபனின் இலக்கிய வாழ்வில் இது புதிய சாதனை.

இதுகுறித்து நீல பத்மநாபன் இந்துதமிழ் திசையிடம் கூறும்போது, ‘‘மதுரையில் தமிழ் மாநாட்டின்போதுதான் இந்நாவலை மொழிபெயர்ப்பு செய்திருக்கும் டாக்டர் லூபாவை முதன்முதலாக சந்தித்தேன். அவர் தமிழும் கற்றிருக்கிறார். அப்போதே பள்ளிகொண்டபுரம் நாவலை படித்திருப்பதாக சொல்லி சிலாகித்தார். நேரடியாக திருவனந்தபுரத்துக்கு வந்தவர் அனந்த பத்மநாபசாமி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றார். நாவலில் அதைப் படித்திருக்கிறார். மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஆலய விதிப்படி சேலை கட்டி பாரம்பரிய உடையில் கோயிலுக்கு வந்தார்.

1970-ல் வெளியான இந்நாவல் 50 ஆண்டுகள் கழித்து, இப்போது ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சந்தோசம் தருகிறது. ‘இலை உதிர்காலம்’நாவலுக்குப் பின் நான் நாவல்கள் எழுதவில்லை. கவிதை பக்கம் வந்துவிட்டேன். என் எழுத்துலக பயணம் தொடங்கியதும் கவிதைகளில் இருந்துதான். 83 வயதாகிவிட்டது. அதனால் நாவலை வடிக்கும் ஞாபகசக்தியில் சிறுதேக்கத்தை உணர்கிறேன்.

இலை உதிர்காலத்தில் வயோதிகர் களின் உலகையே எழுதியிருப்பேன். இப்போது நான் வயோதிகத்தில் இருக்கும்போதுதான் அதில் எழுதப்படாத பிரச்சினைகள் இன்னும் இருப்பதாக உணர்கிறேன். இப்போது காத்திரமான கவிதைகள் எழுதி வருகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x