

லக்னோ: பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி 51 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி வந்தது. உ.பி.யில் அப்னாதளம் மற்றும் நிஷாத் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று பாஜக அறிவித்தது. ஐக்கிய ஜனதா தளம் பற்றி பாஜக எதுவும் கூறவில்லை. பாஜகவுடன் பேச்சு நடத்த மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஆர்சிபி சிங்கை ஐக்கிய ஜனதா தளம் தலைமை நியமித்தது. ஆனால், அவருடன் பாஜக பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து, உ.பி.யில் தனித்துப் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.
ஐக்கிய ஜனதா தள பொது செயலாளரும் உ.பி. பொறுப்பாளருமான கே.சி.தியாகி கூறுகையில், ‘‘கட்சியின் உயர்நிலைத் தலைவர் களுடன் ஆலோசித்து உ.பி.யில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. லக்னோவில் 18-ம் தேதி கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடக்கிறது. அப்போது கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படும்’’ என்றார்.