

16-வது மக்களவையின் தலைவராக பாஜக எம்.பி. சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வானார். அவரை தேர்வு செய்யும் தீர்மானத்தை மோடி முன்மொழிந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து கட்சிகளின் மூத்த தலைவர்களும் இவரை இந்தப் பதவிக்கு வியாழக்கிழமை முன்மொழிந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் பிற்பகலில் முடியும்வரை இந்தப் பதவிக்கு இவரது பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது.
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தம்பிதுரை (அதிமுக), சுதிப் பண்டோபாத்யாயா (திரிணமூல் காங்கிரஸ்), பி.மகதாப் (பிஜு ஜனதா தளம்), முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), எச்.டி.தேவகவுடா (மதசார்பற்ற ஜனதா தளம்) சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் கட்சி), முகம்மது சலீப் (மார்க்சிஸ்ட்), ஜிதேந்திர ரெட்டி (தெலங்கானா ராஷ்டிர சமிதி) உள்ளிட்டோர் சுமித்ரா மகாஜன் பெயரை மக்களவைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்த 19 பேரில் அடங்குவர்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியிலிருந்து 8 முறையாக மக்களவைக்கு தேர்வாகியுள்ளவர் சுமித்ரா மகாஜன் (72).