

லக்னோ : உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மக்கள்தொகையில் உள்ள சாதிகளுக்குச் சமூக நீதி வழங்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உ.பி. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாஜக எல்எல்ஏக்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா, பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர், அமைச்சர் தாரா சிங் சைனி, பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவரும் சிகாஹோபாத் தொகுதி பாஜக எம்எல்ஏ முகேஷ் வர்மா பாஜக எம்எல்ஏ வினய் சாக்யாவும் அந்த கட்சியிலிருந்து இதுவரை விலகியுள்ளார். இவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர்.
தார சிங் சவுகான், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியில் இன்று இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
‘‘உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு மரங்களை எண்ணுகிறது, விலங்குகளை எண்ணுகிறது. ஆனால் ஏன் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள விரும்பவில்லை? மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை எவ்வளவு என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மூலமே மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கு ஏற்ப பயன்களை பெற முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம்’’ எனக் கூறினார்.
பின்னர் மகர சங்கராந்தியன்று கோரக்பூரில் உள்ள ஒரு தலித் வீட்டில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உணவு சாப்பிட்ட சம்பவம் குறித்து குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், இது வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே என்று கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் ‘‘அவர் மிகவும் ஆர்வமில்லாமல் ‘கிச்சடி’ சாப்பிட்டதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அவர் நினைவில் இது இருக்க வேண்டும். ஓ நாங்கள் ஷாம்பு, சோப்பு அனுப்ப மறந்துவிட்டோம் (அந்த குடும்பத்தினர் முன்பே கை கழுவுவதற்காக) .’’ என்றார்.