

புதுடெல்லி : இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த 225 நாட்களி்ல் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் 225 நாட்களில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,702 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டதால், ஒட்டுமொத்த பாதிப்பு 7,743 ஆக அதிகரி்த்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 15 லட்சத்து 50ஆயிரத்து 377ஆக அதிகரித்துள்ளது, கடந்த 225 நாட்களில் இல்லாத அளவு அதிகமாகும். கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 314 பேர் உயிரிழந்தநர், இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 86ஆயிரத்து 66ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 106 பேரும், மே.வங்கத்தில் 36 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்த பாதிப்பில் கரோனாவில் சிகிச்சையில் இருப்போர் 4.18 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 94.51 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தி்ல் கரோனாவில் பாதிக்கப்பட்டு புதிதாக ஒருலட்சத்து 32 ஆயிரத்து 557 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது