Published : 16 Jan 2022 07:11 AM
Last Updated : 16 Jan 2022 07:11 AM

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நேரடி தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை நீட்டிப்பு

புதுடெல்லி

உத்தரபிரதேசம் உள்ளிட்ட5 மாநிலங்களில் நேரடி தேர்தல் பிரச்சாரத்துக்கு தடையை தலைமைத் தேர்தல் ஆணையம் வரும் 22-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பால் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் நேரடி பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலைவழிப் பிரச்சாரம் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 8-ம் தேதி தடைவிதித்தது. இதனால் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தன. தேர்தல் ஆணையம் விதித்திருந்த அந்த தடை நேற்றுடன் முடி வடைந்தது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள், தேர்தல் பேரணிகளுக்கு ஜனவரி 22-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.

இந்தக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனுப் சந்திர பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் வாக்குப்பதிவு நாட்களில் வாக்குச்சாவடிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் இந்தக் கூட்டத் தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பாஜக வேட்பாளர் பட்டியல்

உ.பி. தேர்தலில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த பின்னணியில் பாஜக சார்பில் முதல் வேட்பாளர் பட்டியலை உத்தர பிரதேச பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று வெளியிட்டனர். இதில் 107 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல், 2-ம் கட்டத்தில் 113 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 105 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிராத்து தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது எம்எல்ஏக்களாக பதவி வகிக்கும் 63 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தராகண்ட் முன்னாள் ஆளுநர் பேபி ராணி மவுரியா மீண்டும் ஆக்ரா ஊரக தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நொய்டா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத் தக்கது. பாஜக அறிவித்துள்ள 107 வேட்பாளர்களில் 44 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 19 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.

பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலால் மாநிலத்தில் புதிய கல்லூரிகள், நெடுஞ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி திட்டங்கள் காரணமாக வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நொய்டா, தாத்ரி, ஜேவார் ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நொய்டாவில் கிரிபாராம் சர்மா, தாத்ரியில் மன்வீர் சிங், ஜேவாரில் நரேந்திர பாட்டி தாதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x