Published : 15 Jan 2022 04:47 PM
Last Updated : 15 Jan 2022 04:47 PM

‘‘அகிலேஷ் யாதவுக்கு தலித்துகள் தேவையில்லை; சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லை’’- சந்திரசேகர் ஆசாத் திடீர் அறிவிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி இல்லை என பீம் ஆர்மி தலைவரும், ஆசாத் சமாஜ் கட்சி தலைவருமான சந்திர சேகர் ஆசாத் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் பாஜகவில் இருந்து விலகினார். தொடர்ந்து பாஜகவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.

பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதுமட்டுமின்றி பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க சமாஜ்வாதி கட்சி முயன்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் தலித் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி அமைக்க முயன்று வந்தார்.

கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அறிவிப்பதாகவும் சந்திரசேகர் ஆசாத் கூறியிருந்தார். ஆசாத் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்த இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவர் திடீரென கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் ஆசாத் கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டேன். சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் சுமார் இரண்டு மாதங்களாக பேச முயற்சித்து வருகிறேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. எங்களுக்கு எந்த பதிலும் வராததால், எங்கள் நம்பிக்கை தகர்ந்தது.

அகிலேஷ் யாதவை சந்திக்க இரண்டு நாட்கள் லக்னோவில் இருந்தேன். அகிலேஷ் யாதவிடம் நான் பொறுப்பை விட்டேன். அவர் என்னை அழைக்காமல் அவமானப்படுத்தினார். அகிலேஷ் யாதவுக்கு தலித்துகள் தேவையில்லை. அகிலேஷ் யாதவ் சமூக நீதியை புரிந்து கொள்ளவில்லை.

தலித்துகள் தொடர்பான விஷயங்களில் மௌனம் சாதிக்கிறார். பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக மட்டுமே நான் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் எஸ்பியுடன் கைகோர்க்க முயற்சித்தேன்.அகிலேஷ் யாதவை எனது மூத்த சகோதரராகவே கருதினேன். சமூக நீதிக்கான எனது போராட்டம் தொடரும்.

யாருடன் கூட்டணி என்பது பற்றி இரண்டு நாட்களில் கூறுவேன். இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம். தற்போது சிதறி கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிப்பேன். இல்லையெனில் சமூக நீதிக்காக நானே போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x