Published : 15 Jan 2022 03:07 PM
Last Updated : 15 Jan 2022 03:07 PM

உ.பி. தேர்தல்: யோகி ஆதித்யநாத் அயோத்தியில் போட்டியில்லை; கோரக்பூரில் களமிறங்குகிறார்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அயோத்தியில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தனது சொந்த ஊரிலேயே ஆதித்யநாத் களமிறங்குகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முதல் இரு கட்டங்களுக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

உ.பி. தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டனர்.

அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். துணை முதல்வர் கேசவ் பரிசாத் மவுரியா சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார்” எனத் தெரிவித்தார்.

107 வேட்பாளர்கள் பெயரை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் 83 எம்எல்ஏக்களில் 63 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெண்களுக்கு 10 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 44 இடங்களும், பட்டியலினத்தவர்களுக்கு 19 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆதித்யநாத் 5 முறை கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்தவர் என்பதால், அவரின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் தொகுதியாக இருக்க வேண்டும் என்பதால், இங்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆதித்யநாத்தும், துணை முதல்வர் மவுரியாவும் எம்எல்சியாக உள்ளனர்.

முதல் கட்டத் தகவலில் ஆதித்யநாத் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அயோத்தி அல்லது கோரக்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவித்தன. அயோத்தி தொகுதியில் போட்டியிடுவதற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒப்புதல் கிடைத்துவிட்டது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா அடங்கிய பாஜக மத்தியக் குழு சம்மதித்தால் ஆதித்யநாத் போட்டியிடுவது உறுதியாகிவிடும். இல்லாதபட்சத்தில் மட்டுமே ஆதித்யநாத் தனது சொந்த ஊரான கோரக்பூரில் போட்டியிடுவார். அப்படியென்றால் மத்தியக் குழு ஒப்புதல் கிடைக்காததையடுத்து, கோரக்பூர் தொகுதி ஆத்தியநாத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் உ.பி. அரசியலைப் பொறுத்தவரை கடந்த 18 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ், மாயாவதி, ஆதித்யநாத் ஆகிய மூன்று பேருமே மக்களைத் தேர்தல் களத்தில் சந்தித்து போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவில்லை. மாறாக உ.பி.யில் மேல்சபை எம்எல்சியாகி அதன் மூலம் முதல்வராகினர்.

இதில் விதிவிலக்காக 2004-ம் ஆண்டு கன்னூர் இடைத்தேர்தலில் முலாயம் சிங் யாதவ் போட்டியிட்டு வென்றார். இந்தச் சூழலில் மக்களைச் சந்தித்து தேர்தலில் போட்டியிட ஆதித்யநாத் தீர்மானித்துள்ளார். அந்தப் போட்டியிடும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்பதற்காக சங்பரிவாரங்கள் வலுவாக இருக்கும் அயோத்தி தொகுதியையும், தன்னுடைய பிறந்த மண்ணாகிய கோரக்பூரையும் ஆதித்யநாத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x