Published : 15 Jan 2022 02:34 PM
Last Updated : 15 Jan 2022 02:34 PM

கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக் கட்டாயம்: அக்டோபர் முதல் வருகிறது புதிய சட்டம்

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப் படம்.

புதுடெல்லி : 8 பேர் செல்லக்கூடிய கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகளைப் பொருத்துவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், அக்டோபர் மாதத்திலிருந்து இந்த நடைமுறைக்கு அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, மத்திய மோட்டார் வாகன விதிகள்(1989) திருத்தம் செய்ய, வரைவு சட்டத்தை அதன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட வரைவு சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது :

''2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின், தயாரிக்கப்படும் 8 பயணிகளை (எம்-1) அழைத்துச் செல்லும் கார்களில் ஓட்டுநர், பக்கவாட்டில் அமர்ந்திருப்போர், பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகள் என அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகளைப் பொருத்துவது கட்டாயம்.

பின்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகளுக்குப் பக்கவாட்டிலும், ஓட்டுநர், ஓட்டுநர் அருகே முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கு டேஷ் போர்டிலிருந்தும் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஏர் பேக்கும் பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கையை மூடும் வகையில் இருக்க வேண்டும். இதற்கான வரைவு சட்ட மசோதா 2022, ஜனவரி 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

விபத்துக் காலங்களில் ஓட்டுநர் மற்றும் மோதும் வாகனங்களிடையே பெருத்த சேதத்தைத் தவிர்த்து உயிரிழப்பையும், தீவிர காயத்தையும் தடுக்கும் நோக்கில் இந்தப் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படுகிறது”.

இவ்வாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாலைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணி, ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் ஏர் பேக் கட்டாயம் காரில் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஓட்டுருக்கு மட்டும் கட்டாயம் என கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதலும், 2022, ஜனவரி 1-ம் தேதி முதல் முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கும் ஏர் பேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

8 பயணிகள் செல்லும் கார்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 6 ஏர் பேக் கட்டாயமாக்க வரைவு சட்ட மசோதா வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 496 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 47,984 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறிய ரக கார்களைப் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தினர் மட்டுமே வாங்குகிறார்கள். அவர்களுக்கு கார்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் கடமை. ஆதலால்தான், கூடுதல் ஏர் பேக்குகளை வைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கட்டாயமாக்கியுள்ளார். கூடுதல் ஏர் பேக் வைக்கும்போது ஒவ்வொரு ஏர் பேக்கிறக்கும் தலா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் கூடுதலாகும். இது காரின் விலையில் ஏற்றப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x