

பொக்காரோ: கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர், கரோனா தடுப்பூசிக்குப் பின்னர் பேசுவதும், நடப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட 55 வயது நபர் ஒருவர் கடந்த ஜனவரி 4 ஆம் தேதியன்று கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அவருக்கு அங்கன்வாடி மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கி பக்கவாதத்துக்கு உள்ளான அந்த நபர் இயங்கும், பேசும் திறனை இழந்திருந்தார். ஆனால், ஜனவரி 4ஆம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர் அவரால் இயங்க முடிவதால் அவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொக்காரோ நகரின் மருத்துவர் ஜிதேந்திர குமார், இது தனக்குப் பெரிய ஆச்சர்யத்தை அளிப்பதாகவும் அந்த நபரைக் குறித்து ஆராய ஒரு மருத்துவக் குழு அமைக்க வேண்டும் என தான் அரசுக்கு வலியுறுத்தவுள்ளதாகவும் கூறினார். 4 ஆண்டு கால வாதத்தில் இருந்து ஒரே ஒரு தடுப்பூசியால் மீள்வது என்பது மிகுந்த வியப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். சுகாதாரத் துறை அதிகாரிகளும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பொக்காரோவின் சால்கதி கிராமத்தைச் சேர்ந்த துலார்சந்த் முண்டா தான் இப்போது மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்த அந்த நபர். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், நான் 4ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். அதன் பின்னர் எனது கால்களை அசைக்க முடிந்தது. நான் நிற்கிறேன், நடக்கிறேன். என்னால் பேசவும் முடிகிறது என்றார்.
துலார் சந்தின் குடும்பத்தினர் இதுவரை ரூ.4 லட்சம் செலவழித்து அவரை சீர்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், திடீரென்று அவருக்கு குணமானது கிராமத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.