Published : 15 Jan 2022 07:41 AM
Last Updated : 15 Jan 2022 07:41 AM

டெல்லியில் தொடங்கியது வார இறுதி நாட்கள் ஊரடங்கு: 55 மணி நேரத்துக்கு அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்குத் தடை

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கியது. இதனால் 55 மணி நேரத்துக்கு அதாவது திங்கள் கிழமை காலை 5 மணி வரை அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் அதிகரித்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் புதிதாக24,383 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

அங்கு அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 30% என்றளவில் உள்ளது. அதாவது நூறில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதே பாசிடிவிட்டி விகிதம். இது 5%க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால், டெல்லியில் கரோனா இரண்டாவது அலையின்போது கடந்த மே மாதம் 1 ஆம் தேதி 31.6% ஆக இருந்தத பாசிடிவிட்டி விகிதம் தற்போது பல மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் 30% என்றளவில் உள்ளது.

டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு குணமானது. இந்நிலையில் டெல்லியில் கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும், தனியார் அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் 50 சதவீத திறனில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசியமற்ற எந்த செயல்பாடும் அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது 55 மணி நேரம் கொண்ட வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

பால், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோரின் வசதிக்காக மெட்ரோ ரயில், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் இருக்கைகள் நிரம்பும் அளவுக்கு மட்டுமே பயணிகள் ஏற்றப்படுவர். நின்று கொண்டு பயணிகள் பயணிக்க முடியாது.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில் ‘‘டெல்லியில் கோவிட் -19 அதிகரிப்பதற்கு ஒமைக்ரான் மாறுபாடு காரணமாக இருக்கலாம். மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட 81% மாதிரிகள் பெரிதும் மாற்றப்பட்ட வைரஸின் மாற்றங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x