Last Updated : 14 Jan, 2022 05:37 PM

 

Published : 14 Jan 2022 05:37 PM
Last Updated : 14 Jan 2022 05:37 PM

உ.பி. தேர்தல்: பாஜகவிலிருந்து விலகிய அமைச்சர்கள் மவுரியா, தரம் சிங் சமாஜ்வாதியில் இணைந்தனர்: வேட்புமனுதாக்கல் தொடங்கியது

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்த பாஜகவினர் |படம் ஏஎன்ஐ

லக்னோ :உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி ஆகியோர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியில் இன்று இணைந்தனர்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உ.பி. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நாளொருமேனி பொழுதொரு வண்ணமாய் தினந்தோறும் எல்எல்ஏக்கள் கடந்த 3 நாட்களாக பாஜகவிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து விலகினார் இதைத்தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அகிலேஷ் யாதவை சந்தித்தனர்.

அடுத்ததாக அமைச்சர் தாரா சிங் சைனி நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜவில் இருந்து 7-வது எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவரும் சிகாஹோபாத் தொகுதி பாஜக எம்எல்ஏ முகேஷ் வர்மா இன்று அக்கட்சியில் இருந்து விலகினார். 8-வதாக பிதுனா தொகுதி பாஜக எம்எல்ஏ வினய் சாக்யாவும் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் பாஜக அ ரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்தனர்.

இவர்கள் தவிர்த்து எம்எல்ஏக்களாக இருக்கும் பகவதி சாஹர், வினய் சாக்யா, ரோஷன் லால்வர்மா, முகேஷ் வர்மா, பிரஜேஷ் குமார் பிரஜாபதி ஆகியோரும் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியி்ல் இணைந்தனர்.

அப்னாதளம் எம்எல்ஏ சவுத்ரி அமர் சிங், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்எல்ஏ நீரஜ் குஷ்வாலா மவுரியா, பாஜக முன்னாள் எம்எல்சி ஹர்பால் சைனி, பகுஜன் சமாஜ் முன்னாள் எம்எல்ஏ பல்ராம் சைனி, பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர பிரதாப் சிங், முன்னாள் அமைச்சர் வித்ரோஹி மவுரியா, முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பாதம் சிங், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பான்சி சிங் ஆகியோரும் சமாஜ்வாதியில் இணைந்தனர்.

இதற்கிடையே 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. இந்த 58 தொகுதிகளில் ஷாம்லி, மீரட், முசாபர்நகர், பாக்பாத், ஹபூர்ர், கவுதம்புத்நகர், காஜியாபாத், புலந்தசாஹர், மதுரா, ஆக்ரா, அலிகார்க் ஆகியவை அடங்கும். இதில் 9 தொகுதிகள் பட்டியலின வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 58 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி, வரும் 21ம் தேதி முடிகிறது. 24ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 27ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசிநாளாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x