

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையுடன் வரும் 31-ம் தேதி தொடங்கும் என்றும் ஏப்ரல் 8-ம் தேதிவரை நடக்கும்எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் இந்தத் தேதிகளைப் பரிந்துரை செய்து அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும் அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பட்ஜெட்கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் அமர்வு ஜனவரி 31ம்ேததி தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி முடிந்துவிடும். அதன்பின் ஒருமாதத்துக்குப்பின், 2-வது அமர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி, ஏப்ரல்8ம் தேதிவரை நடக்கும். 5 மாநிலத் தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 10ம் தேதிவரை இருப்பதால் ஒருமாதம் இடைவெளிவிட்டு 2-வது அமர்வு நடத்தப்படஉள்ளது.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம்தேதி வெளியானபின், அடுத்த கட்ட அமர்வை கட்சிகள் உற்சாகத்துடன் தொடங்கும். கரோனா பரவல் இருப்பதால், எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன்தான் வர வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் நடந்த அமர்வுகளில் இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்காமல் தனித்தனி ஷிப்டகளில் நடக்கும்போது நாடாளுமன்றத்தில் கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால், தற்போது இரு அவைகளும் ஒன்றாக நடக்க வேண்டியிருப்பதால், சமூகவிலகல் மற்றும் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதால் கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியமாகும்.