

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கேரள பாதிரியார் பிராங்கோ மூலக்கல் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். பிராங்கோவை கைது செய்யக்கோரி அந்த மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் பாதிரியார் முலக்கல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின் பிராங்கோ மூல்லக்கல் ஜாமினில் வெளியே வந்தார். அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக கூறி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் பிராங்கோ மூலக்கலை விடுவித்து உத்தரவிட்டது.