

சொமாட்டோ நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் நபராக வேலை பார்த்து வந்த சலில் திரிபாதி கடந்த வாரம் சனிக்கிழமை இரவு சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய குடும்பத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவருடைய மனைவிக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் சொமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 38 வயதான சலில் திரிபாதி சொமாட்டோ நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம், டெல்லி ரோகினியில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் உணவுவிநியோகத்துக்காக அவருடைய இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எஸ்யூவி கார் ஒன்று மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
டெல்லி காவல் துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் அந்தக் காரை ஓட்டி வந்துள்ளார். அவர் மீது டெல்லி காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
இந்நிலையில், சலில் திரிபாதியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை சொமாட்டோ செய்யும் என்று அந்நிறுவனத்தின் சிஇஓ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சொமாட்டோ ஊழியர்கள் சக ஊழியர்களிடம் பணம் வசூலித்து சலில் திரிபாதி குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் வழங்கியுள்ளனர். மேலும் ரூ.10 லட்சம் இழப்பீடுத் தொகையாக வழங்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சலில் திரிபாதிக்கு வயதான தாயாரும் சுசேதா என்ற மனைவியும் பத்து வயது மகனும் உள்ளனர். அவருடைய வருமானத்தில்தான் குடும்பம் இயங்கிக் கொண்டு வந்தது. அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய குடும்பம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், அவரது மனைவிக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் சொமாட்டோ சிஇஓ அறிவித்துள்ளார்.
சலில் திரிபாதி குடும்பத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் பலரும் பண உதவி வழங்கி வருகின்றனர். இதுவரையில் ரூ.8 லட்சம் பண உதவியாக வந்துள்ளது என்று சலில் திரிபாதியின் உறவினர் தெரிவித்துள்ளார்.