

ஒமைக்ரானுக்கு பிறகு புதியகரோனா வைரஸ்கள் உருவாகலாம். அந்த சவாலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
தற்போது இந்தியாவில் கரோனா3-வது அலை தொடங்கி இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுஅனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நேரத்தில் நாம் கரோனாதடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். 130 கோடிமக்களும் கரோனாவுக்கு எதிராக போரிட வேண்டும். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம்.
பண்டிகை காலத்தில் கவனம் தேவை
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுமார் 70 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
கடந்த 3-ம் தேதி 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறாருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கினோம். கடந்த 10 நாட்களில் மட்டும் 3 கோடி சிறாருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதிமுதல் சுகாதார, முன்கள பணியாளர்கள், முதியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கரோனா பரவலை தடுக்க தடுப்பூசிதிட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்த வேண்டும். 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட வேண்டும். தடுப்பூசி தொடர்பாக வதந்தி பரவுவதை தடுக்க வேண்டும்.
பண்டிகைக் காலத்தில் கவனக் குறைவாக இருந்துவிடக்கூடாது. வழக்கம்போல மிகுந்த எச்சரிக் கையாக இருக்க வேண்டும். கரோனா தடுப்பு பணிக்காக மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.23,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பல்வேறு மாநிலங்கள் பயனுள்ள வகையில் செலவிட்டு சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளன. கரோனா தடுப்பு பணியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இப்போது உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. எதிர்காலத்தில் புதியகரோனா வைரஸ்கள் உருவாகலாம். அந்த சவாலை எதிர்கொள்வதற்கும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத, பாரம்பரிய மருந்துகளும் கரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டுத் தனிமையிலேயே குணமாகி வருகின்றனர்.
இந்த இக்கட்டான நேரத்தில்சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதற்கேற்ப கரோனா தடுப்பு விதிகளை வகுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.- பிடிஐ