Published : 14 Jan 2022 06:15 AM
Last Updated : 14 Jan 2022 06:15 AM

பாஜக, பகுஜன், காங்கிரஸில் இருந்து கட்சி மாறுபவர்களால் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கலக்கம்

லக்னோ

பாஜக, பகுஜன், காங்கிரஸில் இருந்து கட்சித் தாவும் மூத்த தலைவர்களால், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி, மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறு கிறது. இந்நிலையில், உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, பாஜக, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து சமாஜ்வாதி கட்சிக்கு தாவி வருகின்றனர். இதனால் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உற்சாகமாக இருக்கிறார். ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

உதாரணமாக பாஜக.வில் இருந்து சுவாமி பிரசாத் மவுரியா, ராஜேஷ் பாண்டே ஆகிய மூத்த தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் சேர தயாராகிவிட்டனர். காங்கிரஸில் இருந்து இம்ரான் மசூத் மற்றும் ராம் அச்சல் ராஜ்பர், லால்ஜி வர்மா ஆகியோர் சமாஜ்வாதியில் சேர்ந்துள்ளனர். உ.பி.யில் கட்சி ஆட்சியில் இல்லாத போது கூட, உடன் இருந்து கட்சிக்காக உழைத்து தேர்தலில் ‘சீட்’ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்கள் மற்றும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள சமாஜ்வாதி எம்எல்ஏ.க்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், தேர்தல் நேரத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் சிக்கலை உருவாக்கும். இந்தப் பிரச்சினையை எப்படி கையாளப் போகிறார் அகிலேஷ் யாதவ் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக உன்சாஹர் தொகுதியில் தற்போது சமாஜ்வாதி கட்சியின் மனோஜ் பாண்டே எம்எல்ஏ.வாக இருக்கிறார். இந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட சுவாமி பிரசாத் மவுரியாவின் மகன் உத்கிரிஷ்ட் மவுரியா தோல்வி அடைந்தார். அதனால், தற்போது பாஜக.வில் இருந்து தாவியுள்ள சுவாமி பிரசாத், தனது மகன் உத்கிரிஷ்ட் மவுரியாக்கு உன்சாஹர் தொகுதி யில் ‘சீட்’ கேட்டுள்ளதாக தெரி கிறது. இதனால் மனோஜ் பாண்டே கலக்கத்தில் இருக்கிறார். பகுஜன் கட்சி சார்பில் போட்டியிட்டு, பின்னர் 2016 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்தான் உத்கிரிஷ்ட். இந்தத் தேர்தலிலும் உன்சாஹர் தொகுதியை மகனுக்காக சுவாமி பிரசாத் கேட்டதாகவும், அதற்கு பாஜக மறுத்ததால் சமாஜ்வாதிக்கு தாவியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தப் பிரச்சினை தொகுதி ஒதுக்கீட்டின் போது அகிலேஷ் யாதவுக்கு ஏற்படும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் உத் கிரிஷ்ட்டுக்கு பிரயாக்ராஜில் உள்ள பபாமவ் தொகுதியை ஒதுக்குவ தாக அகிலேஷ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் மேற்கு உத்தர பிரதேச பகுதியில் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் பிரமுகர் இம்ரான் மசூத், சமீபத்தில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார். அவரும் சமாஜ்வாதியில் கட்சியில் விரைவில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சஹாரன்பூர் பகுதி சமாஜ்வாதி மூத்த தலைவர்கள் தங்கள் வாய்ப்பு பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் மூத்த தலைவர்கள் லால்ஜி வர்மா, ராம் அச்சல் ராஜ்பர், ராகேஷ் பாண்டே, திரிபுவன் தத் ஆகியோர் ஏற்கெனவே சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளனர்.

இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகளும், ‘சீட்’ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளை அகிலேஷ் எப்படி கையாள போகிறார் என்பது உ.பி.யில் மற்ற கட்சியினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x