

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலை அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சியுடன் இணைந்து பாஜக சந்திக்க உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஆதித்யநாத் அரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் ஆகியோர் கட்சியை விட்டு விலகிய பிறகு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை பாஜக விரைவுபடுத்தியது.
அப்னா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான அனுப்ரியா படேல், அவரது கணவர் ஆசிஷ் படேல் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபோல் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் உடனும் அமித்ஷா பேசினார். இந்தக் கூட்டங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை பாஜக இறுதி செய்துள்ளது. அப்னா தளம் கட்சி 10 முதல் 14 தொகுதிகளிலும் நிஷாத் கட்சி 13 முதல் 17 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. கிழக்கு உ.பி.யில் இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் சின்னம் தவிர பாஜக சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது.