

உ.பி. தேர்தல் தொடர்பாக பாஜக தேர்தல் குழு கூட்டம், டெல்லியில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத், நிதின் கட்கரி, அமித்ஷா, உ.பி. முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர்கள் தினேஷ் சர்மா, கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதொடர்பாக பாஜக வட்டாரங் கள் கூறியதாவது:
உ.பி.யில் முதல் 2 கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் 172 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர தேர்தலை எதிர்கொள்ளும் பிற மாநிலங்களுக்கு தனித்தனி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஆதித்யநாத்தை இத்தேர்தலில் போட்டியிடச் செய்வதா அல்லது தவிர்ப்பதா என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. அவர் அயோத்தி அல்லது மதுராவில் போட்டியிட வாய்ப்புள்ளது. எனினும் இதுகுறித்து பிரதமர் இறுதி முடிவை பிறகு எடுப்பார்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் ஆதித்யநாத் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டதில்லை. இதற்கு முன் கோரக்பூர் மக்களவை தொகுதியில் 5 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மாநில சட்டமேலவை உறுப் பினராக அவர் உள்ளா்ர்.
இதற்கு முன் பாஜக.வின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, பாஜகவுக்கு கடும் போட்டியாக விளங்குகிறது. தவிர பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளன.
பிராந்திய கட்சிகளின் வானவில் கூட்டணியுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்துள்ளார். ஓபிசி சமூகத்தினரில் யாதவர் அல்லாத பிற சமூகத்தினரின் ஆதரவை பிராந்திய கட்சிகள் பெற்றுள்ளன.
கடந்த 2017 தேர்தலில் அப்னா தளத்துக்கு 11 இடங்களும் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 8 இடங்களும் பாஜக ஒதுக்கியது. ஓம்பிரகாஷ் ராஜ்பர் இம்முறை சமாஜ்வாதியுடன் கைகோத் துள்ளார். கடந்த 2017 தேர்தலில் பாஜக 312 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 47 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன.
7-வது எம்எல்ஏ விலகல்
உத்தரபிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மற்றொரு அதிர்ச்சியாக, ஷிகோஹாபாத் எம்எல்ஏ முகேஷ் வர்மா நேற்று கட்சியை விட்டு விலகினார். கடந்த மூன்று நாட்களில் பாஜகவை விட்டு விலகும் 7-வது எம்எல்ஏ இவர் ஆவார்.