ஹர்திக் படேலை விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை: 500 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு அமல்

ஹர்திக் படேலை விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை: 500 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு அமல்
Updated on
1 min read

குஜராத் சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஹர்திக் படேலை விடுவிக்கக் கோரி மேசனா நகரில் நேற்று நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஓபிசி பட்டியலில் சேர்க்கக் கோரி படேல் இனத்தவர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். இதற்கு தலைமை தாங்கிய ஹர் திக் படேல் (22) மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சர்தார் படேல் குழுவின் தலைவர் லால்ஜி படேல் தலைமையில் மேசனா நகரில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது சிறையில் உள்ள ஹர்திக் படேல் உள்ளிட்டவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்க மறுத்த அவர்கள், போலீ ஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக் காரர்களை கலைக்க முயன்றனர்.

இதுகுறித்து மேசனா மாவட்ட ஆட்சியர் லோசன் சேரா கூறும் போது, “மேசனா நகரில் வன்முறை வெடித்ததால் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் 2 அரசு கட்டிடங்களை தீயிட்டு கொளுத்தினர். வருவாய் துறை அதிகாரிகள் 2 பேர் காயமடைந்தனர்” என்றார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறும்போது, “இந்திய உணவுக் கழக கிடங்கு மற்றும் வேறொரு அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இது தொடர்பாக 15 பேரை கைது செய்துள்ளோம். இந்த மோதலில் 5 போலீஸார் காயமடைந்தனர்” என்றனர்.

மேசனா நகரில் நடைபெற்ற போராட்டம் குறித்து கேள்விப்பட்டு, சூரத் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹர்திக் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய் தனர். மேலும் வதந்தி பரவுவதைத் தடுப்பதற்காக சூரத், ராஜ்கோட் நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in