

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் பாஜகவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, அந்த கட்சி பெரும் தோல்வியை தழுவப்போகிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து விலகினார்.
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மவுரியா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி அமைச்சரவையில் இருந்து ஆயுஷ் அமைச்சர் தரம் சிங் சைனி இன்று ராஜினாமா செய்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதுகுறித்து கூறியதாவது:
‘‘உத்தர பிரதேசத்தில் பாஜகவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சி பெரும் தோல்வியை தழுவப்போகிறது. அதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரியத் தொடங்கி விட்டன. பாஜகவில் இருந்து அமைச்சர், எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறாத ஒரு நாள் கூட இல்லை.
தினம் தினம் கூட்டமாக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். உ.பி.யில் 13 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.,வில் இருந்து விலகி, வேறு கட்சியில் சேர உள்ளனர். இன்று ஒருநாளில் மட்டும் 4 பாஜக எம்எல்ஏக்கள் வெளியேறுகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இதில் இருந்தே உ.பி.யில் பாஜகவில் நிலை என்ன அறிய முடிகிறது’’ எனக் கூறினார்.