அதிகரிக்கும் கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
புதுடெல்லி: நாடு முழுவதும் அன்றாடம் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் வேலை எனப் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் இருந்தே முடுக்கிவிடுமாறு அறிவுறுத்துவார் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே நாடு முழுவதும் 15 முதல் 18 வயதில் உள்ள சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும், 60 வயதுக்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்கள், இணை நோய் கொண்டோர், முதியோர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடுவதையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் மாநில முதல்வர்களை காணொலி வாயிலாக சந்திக்கிறார். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கரோனா பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த மாநிலங்கள் கூடுதல் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகின்றன.
இதற்கிடையில், நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால், ஒமைக்ரான் வகை வைரஸை சாதாரண ஜலதோஷம் போன்று நினைக்காமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். டெல்டா வைரஸ் இடத்தை ஒமைக்ரான் பிடித்துவிட்டது. இப்போது ஒமைக்ரான் தான் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக உள்ளது. டெல்டாவைவிட மிக வேகமாகப் பரவுகிறது. ஆகையால் கவனம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
