

புதுடெல்லி: உலக நாடுகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விசா இல்லாமலேயே தங்கள் நாட்டில் நுழைய அனுமதிக்கின்றன.
எனினும், தங்கள் நாட்டுக்கு வந்த பிறகு விசா வழங்குகின்றன. இதற்காக பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் அடிப்படையில், ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திடமிருந்து தகவலை திரட்டி கடந்த 2021-ம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா 7 இடங்கள் முன்னேறி 83-ம் இடத்தைப் பிடித்துள்ளது. 2020-ம் ஆண்டில் இந்தியா 90-வது இடத்தில் இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு செல்லும் நிலை இருந்தது. இது 2021-ல் 60 ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் பட்டியலில் கடந்த 17 ஆண்டுகளாக ஜப்பானும் சிங்கப் பூரும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளன. கரோனா கால தற்காலிக கட்டுப்பாடுகளை தவிர்த்து பார்த்தால், இந்த 2 நாடுகளைச் சேர்ந்தவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜெர்மனியும் தென்கொரியாவும் 190 நாடுகளுடன் 2-ம் இடத்தில் உள்ளன. 189 நாடுகளுடன் பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் ஆகியவை 3-ம் இடத்தில் உள்ளன.