சமாஜ்வாதியில் இணைந்தார் உ.பி. அமைச்சர்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று அவரது கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுரியா.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று அவரது கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுரியா.
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜகவின் முக்கிய தலைவராக கருதப்பட்ட சுவாமி பிரசாத் மவுரியா நேற்று அகிலேஷ் சிங் யாதவை சந்தித்து அவரது சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

கேபினட் அமைச்சராக தொழிலாளர் துறைக்கு பொறுப்பு வகித்த இவர் முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது ஆளும் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா, இதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்தார். பலமுறை எம்எல்ஏவாக இருந்த அவரை கட்சி விரோத நடவடிக்கைக்காக 2016-ல் மாயா வதி வெளியேற்றினார்.

இதையடுத்து, 2017 சட்டப்பேரவை தேர்தலுக்கு சற்று முன்பாக மவுரியா, பாஜகவில் இணைந்தார். அவருக்கும் அவரது மகள்சங்கமித்திரைக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. இருவரும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மவுரியா, கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மவுரியாவின் வருகை குறித்து படத்துடன் ட்விட்டரில் பதிவு செய்த அகிலேஷ், “இவரது வருகையால் எதிர்வரும் தேர்தலில் மாற்றம் ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு எம்எல்ஏ

மவுரியாவின் ராஜினாமா கடிதத்தை உ.பி. ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏவான ரோஷன்லால் வர்மா கொண்டு சென்றார். எனவே இவரும் மேலும் சில எம்எல்ஏக்களுடன் சமாஜ்வாதியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.

மவுரியா விலகலின் தாக்கமாக பாஜகவின் 3 அமைச்சர்கள், அகிலேஷ் யாதவுடன் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது.

வியாபாரிகள் மீது பாரபட்சம்

இதுகுறித்து சுவாமி பிரசாத்மவுரியா தனது சமூக வலைதளப் பதிவுகளில், “நான் எந்தக்கட்சியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடுவேன். முதல்வர் யோகியின் அரசில் ஓபிசி, தலித், விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மீது பாரபட்சம் காண்பிக்கப்படுவதால் ராஜினாமா செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸின் முக்கிய முஸ்லிம் முகமான இம்ரான் மசூத் எம்எல்ஏவும் சமாஜ்வாதியில் சேரத் தயாராகிறார். இதனால், காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் வாக்குகள் சமாஜ்வாதிக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in