ஆந்திராவில் ஜனவரி 18 முதல் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்

ஆந்திராவில் ஜனவரி 18 முதல் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்

Published on

அமராவதி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர அரசு இரவு நேர ஊரடங்கை தள்ளி வைத்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இரவுநேர ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் வெளியான தகவலின்படி மாநிலத்தில் புதிதாக 1,831 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முந்தைய நாள் இது, 948 ஆக இருந்தது. தற்போது இரட்டிப்பாகி உள்ளது. நேற்று 242 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 7,195 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் 467 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து விசாகப்பட்டினம் 295 , கிருஷ்ணா 190, குண்டூர் 164, அனந்தபூர் 161, நெல்லூர் 129, பிரகாசம் 122 என மொத்தம் 1,831 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவுவதால், இரவு நேர ஊரடங்கு விரைவில் பிறப்பிக்கப்படும் ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால், பொதுமக்கள் வெளியூர் செல்லவும் மீண்டும் ஊர் திரும்பவும் அவதிப்பட கூடாது எனும் நோக்கில், ஆந்திராவில் வரும் 18-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இரவு நேர ஊடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in