Last Updated : 03 Apr, 2016 11:36 AM

 

Published : 03 Apr 2016 11:36 AM
Last Updated : 03 Apr 2016 11:36 AM

மகாராஷ்டிராவில் சனீஸ்வரன் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம்: முதல்வர் மீது வழக்கு தொடர போவதாக எச்சரிக்கை

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஷின்கனாபூர் சனீஸ்வரன் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் அமைப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது வழக்கு தொடரப் போவதாக பெண்கள் அமைப்பின் தலைவரான திருப்தி தேசாய் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக் குள் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ‘‘வழிபாட்டுத் தலங் களில் பாலின வேறுபாட்டை சட்டம் ஊக்குவிக்கவில்லை. கோயிலுக்குள் சென்று பெண்கள் வழிபாடு நடத்துவது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தீர்ப்பளித்தது.

இதையடுத்து அகமதுநகர் மாவட்டத்தில் ஷின்கனாபூரில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயிலுக்குள் நுழைய பூமாதா ரன்ராகினி பெண்கள் அமைப்பின் தேசாய் தலைமையில் பெண்கள் அணி திரண்டனர். ஆனால் கோயில் நிர்வாகிகளும், உள்ளூர்வாசிகளும் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், தேசாய் உள்ளிட்ட பெண்களை அந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த பகுதி முழுவதும் பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.

போலீஸாரும் ஆதரவு

அப்போது போலீஸாரிடம் பேசிய தேசாய், உயர் நீதிமன்றம் தங்களுக்கான உரிமையை உறுதி செய்திருப்பதால் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை செய்யக் கூடாது என வாதாடினர். எனினும் உள்ளூர் மக்களுடன் இணைந்து போலீஸாரும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து தேசாய் உள்ளிட்ட பெண்கள் அந்த இடத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தேசாய் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட சனீஸ்வரன் கோயிலுக்குள் எங்களை அனுமதிக்கும்படி போலீஸாருக்கு முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத் துக்காக முதல்வர் மீது வழக்கு தொடர்வேன். பெண்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை மாநில அரசு செயல்படுத்தவில்லை. மகாராஷ்டிர மாநில இந்து கோயில் வழிபாட்டு சட்டம் பெண்களும் கோயிலுக்குள் செல்லலாம் என கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அந்த சட்டம் எங்களுக்கு கைகொடுக்கவில்லை’’ என்றார்.

பழங்காலம் முதலே இந்த சனீஸ்வரன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x