

சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் சரிதா நாயருக்கு எதிராக கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கேரளாவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தும் நிறுவனத்தை போலியாக தொடங்கி மோசடியில் ஈடுபட்ட தொடர்பாக சரிதா நாயர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊழல் விவகாரத்தில் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் பலருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி மீதும் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் சரிதா நாயர் அண்மையில் அளித்த பேட்டியில், உம்மன் சாண்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குற்றம் சாட்டினார். வரும் மே 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தன் மீது அபாண்டமாக பழிசுமத்தப்படுவதாக சாண்டி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சரிதா நாயருக்கு எதிராக கொச்சி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உம்மன் சாண்டி நேற்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். சரிதாவின் பேட்டியை ஒளிபரப்பிய 2 மலையாள சேனல்களை சேர்ந்த 4 செய்தியாளர்களுக்கு எதிராகவும் அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.