

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு நடைமுறைகளை ஆன்லைனில் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
லேர்னர் லைசன்ஸ் (எல்.எல்.ஆர்.) வழங்குவதற்கான தேர்வையும் ஆன்லைன் மூலம் நடத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலையும் ஆன்லைனில் செயற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பல்வேறு உரிமங்களைப் பெறுவதற்காக பொது மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே இலக்கு. எனவேதான் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை ஆன்லைன் மூலமே முடிக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறோம். ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதல்வர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பயிற்றுவிப்பர் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்" என்றார்.
கடுமையான அபராதம்
இதுதவிர போக்குவரத்து விதிமுறை மீறல்கள், குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், 18 வயதுக்கு முன்னதாக வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதோர் ஆகியோருக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்கவும் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.