

ஒடிசா மாநிலத்தின் தியோகார் மாவட்டத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஒடிசா மாநிலத்தின், பர்கார் மாவட்டத்தில் ‘பாரதி கானநாட்டியா’ என்ற பெயரில் இசை நாடகக் குழு செயல்படுகிறது. இக்குழுவைச் சேர்ந்த சுமார் 40 பேர், இதே மாநிலத்தின் தியோகார் மாவட்டத்தில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, நேற்று முன்தினம் பேருந்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மலைச் சாலையில் குறுகிய வளைவில் பேருந்து திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. மாலை சுமார் 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தை தொடர்ந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீடித்த மீட்புப் பணியில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் கலைஞர்களின் மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ளார்.