

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி அரசுப் பொறியியல் கல்லூரியின், இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) செயற்பாட்டாளர் தீரஜ் ராஜேந்திரன் படுகொலை செய்யப்பட்டார். இவரை இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மறைந்த தீரஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
நடந்தது என்ன? கேரள மாநிலம் இடுக்கி அரசுப் பொறியியல் கல்லூரியின், இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) செயற்பாட்டாளர் தீரஜ் ராஜேந்திரன். இவர் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு சமீபத்தில் திரும்பியுள்ளார். இந்நிலையில் கல்லூரியில் இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) உறுப்பினர்களுக்கும், கேரள மாணவர் சங்க (கேஎஸ்யு) செயல்பாட்டாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் தீரஜ் ராஜேந்திரனின் இதயத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாகவே கல்லூரி வளாகத்தில் தேர்தல் பணிகள் நடந்து வந்துள்ளன. இதன் நிமித்தமாக கல்லூரியின் இரு மாணவர் அமைப்பினருக்கும் இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டுவந்துள்ளன. இந்நிலையில் இந்தக் கொலை நடந்துள்ளது.
இந்தக் கொலையால் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மீது ஒரு பிரிவினருக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பினராயி கண்டனம்: இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "இடுக்கியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி மாணவரும், எஸ்.எஃப்.ஐ செயல்பாட்டாளருமான தீரஜ் ராஜேந்திரன் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் தருகிறது. இந்தக் கொலை சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.. கல்லூரிகளில் கலவரத்தை உருவாக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. தீரஜ் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அம்மாநில காங்கிரஸ் மீது சரமாரிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஆனால் கொலைக்கு தாங்கள் காரணமில்லை என்று கூறும் காங்கிரஸார், எஸ்எஃபஐ அமைப்பைச் சேர்ந்த சிலரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தது. இதனால், போராட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
தமிழகத்திலும் சர்ச்சை: மாணவர் தீரஜ் கொலை தொடர்பாக தமிழகத்திலும் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. அங்கே சிபிஎம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட்டை அப்படியே மொழிபெயர்ப்பு செய்துள்ளது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
அதில் "கேரளா, இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் குண்டர்களால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட #SFI தோழர் தீரஜ்அவர்களுக்கு வீரவணக்கம்!" என்று உள்ளது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ள கூட்டணியில் தான் சிபிஎம் இருக்கிறது. அப்படியிருக்க 'காங்கிரஸ் குண்டர்கள்' என்ற வார்த்தைகளோடு பகிரப்பட்டுள்ள இந்த ட்வீட் இங்குள்ள காங்கிரஸ்காரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில், மாணவர் தீரஜ் ராஜேந்திரனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது, "என் மகனைக் கொலை செய்தவர்களிடம் என்னையும் கொலை செய்துவிடுமாறு சொல்லுங்கள்" என்று தீரஜின் தாய் கதறி அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது.
கேரளாவில் கல்லூரிகளில் நிகழும் அரசியல் மோதல்கள், அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.