Published : 11 Jan 2022 12:50 PM
Last Updated : 11 Jan 2022 12:50 PM

கரோனா 3-வது அலை: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை ஆலோசனை?

புதுடெல்லி: கரோனா வைரஸின் 3-வது அலை நாட்டில் தீவிரமடைந்துள்ளதை அடுத்து வரும் வியாழக்கிழமை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை கரோனா தொற்று ஆயிரங்களில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பும் 4 ஆயிரத்தைக் கடந்து சென்றுள்ளது

ஆனால், கரோனா 2-வது அலையில் இருந்ததைப் போல் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது குறைந்திருக்கிறது. உயிரிழப்பும் பெருவாரியாகக் குறைந்துள்ளது. ஆனாலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவு இருக்கின்றன, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எவ்வாறு தயாராகி இருக்கிறோம் என்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை, உள்துறை அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் அளவை அதிகப்படுத்த வேண்டும், கரோனா விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாநில முதல்வர்களுடன் வரும் வியாழக்கிழமை காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் லாக்டவுன் நடவடிக்கைகளை மாநில அரசுகள் கையாண்டு வருகின்றன.

இதில் 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன, 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர், முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்ளுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் வேகம், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x