Published : 11 Jan 2022 06:05 AM
Last Updated : 11 Jan 2022 06:05 AM

10% கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதி; மாநிலங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை அறிவுரை

புதுடெல்லி: கரோனா தொற்று அதிகரிப்பதால், மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலாக உரு வெடுத்துள்ளது. கரோனா பரவலை தடுப்பது தொடர்பாக கடந்த 8, 9-ம் தேதிகளில் மத்திய சுகாதாரத் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் விரிவான வழிகாட்டு நெறிகளை அனுப்பியுள்ளது. சுகாதார பணியாளர்கள் பற்றாக் குறையை சமாளிக்க எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர் கள், பிஎஸ்சி நர்சிங் 3, 4-ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர், எம்எஸ்சி நர்சிங் முதலாம், 2-ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியரை கரோனா தடுப்பு பணியில் மாநில அரசுகள் ஈடுபடுத்தலாம்.

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் போது 20 முதல் 23 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். தற்போதைய சூழலில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 5 முதல் 10 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த சதவீதம் உயரும் அபாயம் உள்ளது.

எனவே அனைத்து மாநில அரசு களும் யூனியன் பிரதேச அரசுகளும் கரோனா பரவல் நிலையை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். வீட்டு தனிமையில் இருப்போர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், ஆக்சிஜன் படுக்கைகள், அவசர சிகிச்சை படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி குறித்து முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். சுகாதார பணியாளர்களின் சேவையை திறம்பட நிர்வகிக்க வேண்டும்.

அந்தந்த மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். தனியார் கட்டண விகிதங்களை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எம்பிபிஎஸ் மாணவர்கள் மூலம் டெலிமெடிசின் சேவையை வழங்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வலர்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளிலும் இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் டெலிமெடிசின் சேவையை தொடங்க வேண் டும். இதன் மூலம் வீட்டு தனிமையில் இருப்போர், கரோனா மையங்களில் இருப்போருக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

கரோனா நோயாளிகளை பராமரிப்பது குறித்த வீடியோக் கள் திக்சா உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் பதிவிடப்பட் டுள்ளது. இதன்மூலம் முன்கள பணியாளர்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தலாம்.

அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சீரிய தலைமை, திட்டமிடல் மூலம் கரோனா பெருந் தொற்று சவாலை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு சுகாதாரத் துறை செயலர் கடிதத்தில் கூறியுள்ளார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x