

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமராவதியில் நேற்று காலை கரோனா தொற்று நிலைமை குறித்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
அப்போது முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது: கரோனா தொற்றுக்கு 104 இலவச எண் மூலம் மக்கள் அழைப்பு விடுத்தால், அவர் களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க அதிகாரிகள் தயார் நிலையில் இருத்தல் அவசியம். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கரோனா சிகிச்சை மையம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அதில், ஆக்ஜிஜன், படுக்கை வசதி, மருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் போன்றவர்கள் இருத்தல் அவசியம். முக கவசம் அணியா தோரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். திரையரங்குகளில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கரோனா வேகமாக பரவுவதால், விரைவில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கை அமல் படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்து அமல் படுத்துங்கள்.
இவ்வாறு ஜெகன்மோகன் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் 244 பேருக்கும், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 151 பேருக்கும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 117 பேருக்கும் தொற்று ஊர்ஜிதமாகி உள்ளது. 152 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.