Last Updated : 10 Jan, 2022 03:43 PM

 

Published : 10 Jan 2022 03:43 PM
Last Updated : 10 Jan 2022 03:43 PM

அதிக காய்ச்சல், உடல்நடுக்கம் - குழந்தைகள், டீன் வயதினரின் கரோனா அறிகுறிகள் | மருத்துவ வல்லுநர் பகிரும் 6 அம்சங்கள்

படம் உதவி: ட்விட்டர்

புதுடெல்லி: கரோனா வைரஸால் குழந்தைகள், பதின்வயதினர் பாதிக்கப்பட்டால், அவர்களிடம் காணப்படும் அறிகுறிகள் குறித்து டெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான நுரையீரல் நிபுணர் மருத்தவர் தீரன் குப்தா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதோடு ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இதுவரை ஒமைக்ரானால் 4,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸாகட்டும், ஒமைக்ரானாகட்டும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆனாலும், முன்னெச்சரிக்கையாக 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கிவிட்டது.

ஆனால், குழந்தைகளுக்கும், பதின்வயதினருக்கும் கரோனா தொற்றால் ஏற்பட்டால், அதை பிசிஆர் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்றாலும், அதற்கான பொதுவான அறிகுறிகள் குறித்து ஸ்ரீ கங்கா ராம்மருத்துவமனையின் குழந்தைகளுக்கான நுரையீரல் நிபுணர் மருத்தவர் தீரன் குப்தா விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதன் 6 முக்கிய அம்சங்கள்:

> "குழந்தைகள், 11 வயது முதல் 17 வயதுள்ள பதின்வயதினர் கரோனாவில் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பொதுவாக அதிக காய்ச்சல், உடல்நடுக்கம் இருக்கும். நான் பார்த்தவரையில் 2 வயது குழந்தைக்கு கூட காய்ச்சலும், உடல்நடுக்கமும் இருந்தது, பின்னர் மருத்துவமனையில் சேர்த்தோம். இதுவரை 9 பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சையளித்திருக்கிறேன். இதில் ஒரு குழந்தைக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் வரை சென்றது; மற்ற குழந்தைகளுக்கு அதிகமான காய்ச்சல் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதி்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்

> ஆனால், குழந்தைகளோடு ஒப்பிடுகையில் பதின்வயதினருக்கு டெல்டா வைரஸ் அறிகுறிகளும் ஒரேமாதிரியாக இல்லாமல் தீவிரம் குறைந்தே இருந்தது.என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரை 2 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கரோனா வைரஸில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, டெல்டா வைரஸின் தீவிரத்தன்மை இருக்கும். ஆனால், 11 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு அதிகமான அறிகுறிகள் இருக்கும், தீவிரத்தன்மை டெல்டா வைரஸ் போல் இருக்காது.

> ஒமைக்ரான் வைரஸைப் பொறுத்தவரை மனிதர்களின் மேல்புற சுவாசப் பகுதி (upper respiratory) பகுதியைத்தான் பாதிக்கிறது. இதனால், தொற்றின் அறிகுறிகள் ஜலதோஷம், தலைவலி, மூக்கில் நீர்வடிதல், காய்ச்சல், உடல்நடுக்கம் ஆகியவை இருக்கும்.

> 2-வது அலையில் இருப்பதற்கு மாறாகவே ஒமைக்ரான் இருக்கிறது. ஒமைக்ரானில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே நாவில் சுவை உணர்வு இல்லாமல் இருத்தல், மணம் இழத்தல் போன்றவை இல்லை. 10 நோயாளிகளில் 3 பேருக்கு மட்டுமே இந்த அறிகுறி இருக்கிறது, டெல்டா மீது ஒமைக்ரானின் அதிகமான தாக்கத்தால் டெல்டாவின் அறிகுறிகள் இல்லை.

> உடல் ஆரோக்கியமாக இருப்போர், தடுப்பூசி செலுத்தியோர் ஆகியோரிடம் ஒமைக்ரான் அறிகுறிகள் லேசாகவே இருக்கின்றன. ஆனால், தடுப்பூசி செலுத்தாதவர்கள், இணைநோய்கள் இருப்போரிடம் வீரியம் அதிகமாக இருக்கிறது.

> சில நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், நுரையீரல் தாக்கத்துக்கு, அதாவது நிமோனியாவுக்கு ஆளாகிறார்கள். இதுவரை, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளை கையாண்டிருக்கிறேன். சிகிச்சையின்போது அவர்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகள் தேவைப்பட்டன" என்று மருத்துவர் தீரன் குப்தா விளக்கம் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x