

குஜராத் கடல் பகுதிக்குள் நுழைந்தபாகிஸ்தான் படகை பறிமுதல் செய்ததுடன் அதில் இருந்த 10 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்துள்ளது.
இதுகுறித்து குஜராத் கடலோர காவல் படை செய்தித் தொடர்பாளர் நேற்று ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
அரபிக் கடல் பகுதியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான அங்கித் கப்பல் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது 6 மைல் தூரத்துக்கு இந்திய கடல் பகுதிக்குள் ஒரு படகு வந்து கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கவனித்தனர். இதனிடையே, நமது கப்பலைப் பார்த்தவுடன் அந்தப் படகில் இருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால் விரட்டிச் சென்ற நமது படையினர் அந்தப் படகை சிறைபிடித்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த யாசீன் என்ற அந்தப் படகில் இருந்த 10 பேரை கைது செய்ததுடன், 2 ஆயிரம் கிலோ மீன்கள், 600 லிட்டர் எரிபொருளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்தப் படகு மற்றும் அதில் இருந்தவர்களை போர்பந்தர் நகருக்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதாலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாலும் இந்திய-பாகிஸ்தான் கடல் பகுதியில் ரோந்து பணியை மேலும் பலப்படுத்துமாறு கடற்படை தலைவர் வி.எஸ்.பதானியா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி இதே கடல் பகுதியில் 12 பேருடன் பாகிஸ்தான் படகை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதுபோல கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பாகிஸ்தானின் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டதுடன் ரூ.400 கோடிமதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.- பிடிஐ