

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரத்தை 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதில் இளைஞர்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் குறிப்பிட்டார்.
வெளிநாடுவாழ் இந்தியர் தின நிகழ்வில் அவர் பேசியதாவது:
சர்வதேச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பல இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, ட்விட்டர்நிறுவனத்தின் பராக் அகர்வால் ஆகியோரைப் போன்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியமான பங்களிப்பை அளிக்க இயலும். அடுத்த25 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் ஆகும். நூற்றாண்டு கொண்டாட்டத்தில் எத்தகைய இலக்கை எட்ட வேண்டும் என்பதற்கான திட்டமிடல் இப்போதே தொடங்கியுள்ளது.
`விஷன் 2047’ என்ற தொலை நோக்கு திட்டத்தில் இந்தியா எத்தகைய பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற திட்டமிடலும் உள்ளது. உலக வங்கி மதிப்பீட்டின்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 லட்சம் கோடி டாலராகஉயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையை எட்டுவதில் இளைஞர்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி, 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதிதென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். அதற்குப்பிறகுதான் சுதந்திரப் போராட்டம்தீவிரமடைந்தது. இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 9-ம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பர்.
இதுகுறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகளை இரட்டிப்பாக்கி நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும், இந்தியாவின் கலாச்சார தூதுவர்களாக வெளிநாடுகளில் இந்தியர்கள் திகழ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலகெங்கிலும் உள்ளஇந்தியர்களை ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வு மற்ற எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவம் மிக்கது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களை ஒன்றிணைக்கக் கூடியது. வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவர்களது வேர் இந்தியா என்பதை நினைவுபடுத்தி அவர்களை ஒன்றிணைக்கிறது. அந்த வகையில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பெருமைப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வெளிநாடுகளில் இந்தியர்கள் நிகழ்த்தும் சாதனைகள் குறித்து பெருமைப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
- பிடிஐ