Published : 10 Jan 2022 12:44 PM
Last Updated : 10 Jan 2022 12:44 PM

பிஹாரில் கள்ளச் சாராயத்தை எதிர்த்த விமானப் படை அதிகாரி கொலை

மோதிஹாரி: பிஹார் மாநிலம் கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் ஆதித்ய குமார் (37). விமானப்படையில் ஜூனியர் வாரன்ட் ஆபிசராக பணிபுரிந்து வந்தார். கிராமத்தில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கள்ளச்சாராய வியாபாரிகள் சிலர் டிராக்டரில் பெரிய டிரம்களில் கள்ளச்சாராயத்தை எடுத்து வருவதைப் பார்த்த ஆதித்ய குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிக் கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த கள்ளச்சாராய வியாபாரிகள் ஆதித்ய குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ஆதித்ய குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து ஆதித்ய குமாரின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். தங்கள் பண்ணை நிலம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாகவும் தங்கள் நிலத்தின் தடுப்புகளை சாராய வியாபாரிகள் 10 பேர் கடந்த வெள்ளிக்கிழமை உடைத்து சாராய டிரம்களுடன் டிராக்டரில் வந்ததை எதிர்த்தபோது ஆதித்ய குமாரை அவர்கள் குத்தியதாகவும் அமிர்தசரஸில் இருந்து தனது மகன் விடுமுறையில் வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் ஆதித்ய குமாரின் தந்தை புகார் அளித்துள்ளார். குற்றவாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x