ரூ.7 லட்சத்தில் நாய்க்கு பிறந்த நாள் விழா: கரோனா தடுப்பு விதிகளை மீறியதால் 3 பேர் கைது

வளர்ப்பு நாய் அபி
வளர்ப்பு நாய் அபி
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் வளர்ப்பு நாய்க்கு ரூ.7 லட்சம் செலவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கரோனா விதிகள் மீறப்பட்டதால் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தின் அகமதாபாத், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிராக் படேல் (24). இவரது தம்பி ஊர்விஷ் படேல் (19). இவர்களது வளர்ப்பு நாய் அபி. சில நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் உள்ள திறந்தவெளி மகாலில் இவர்கள், தங்களது நாயின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

நாயின் பிறந்த நாள் விழாவுக்காக அண்ணனும் தம்பியும் ரூ.7 லட்சம் வரை செலவு செய்து பிரம்மாண்டமாக விழாவை நடத்தினர். இதில் உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இசைக் கச்சேரி, கர்பா நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

விழாவில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஆடி, பாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து அகமதாபாத்தின் நிகோல் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிராக் படேல், ஊர்விஷ் படேல், அவர்களது நண்பர் திவேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து நிகோல் ஆய்வாளர் ஜாலா கூறும்போது, "குஜராத் மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் முறையான அனுமதி பெறாமல் வளர்ப்பு நாய்க்கு பிறந்த நாள் விழாவை நடத்தியுள்ளனர். விழாவில் பங்கேற்றவர்கள் கரோனா விதி களை பின்பற்றவில்லை. இதன் காரணமாக விழாவை நடத்திய 3 பேரை கைது செய்துள்ளோம்" என்றார். கைதான 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in