சத்தீஸ்கரில் நக்சல் முகாமில் இருந்து திருமணம் செய்வதற்காக தப்பி ஓடிய நக்சல் ஜோடி கொலை

சத்தீஸ்கரில் நக்சல் முகாமில் இருந்து திருமணம் செய்வதற்காக தப்பி ஓடிய நக்சல் ஜோடி கொலை
Updated on
1 min read

சத்தீஸ்கரில் நச்கல் முகாமில்இருந்து திருமணம் செய்வதற்காக தப்பியோடிய ஜோடியை அந்த அமைப்பினரே கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்களூர் வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் நக்சலைட்கள் மறைந்து வசித்து வருகின்றனர். அதில் ஒரு பிரிவின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் கம்லு புனேம். இவர் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பிரிவில் இருந்தவர் பெண் நக்சலைட் மங்கி. இவர் 3 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இந்த ஜோடி, நக்சலைட் இயக்கத்தினருக்கு தெரியாமல் வனப்பகுதியில் இருந்து சமீபத்தில் தப்பியோடினர். பின்னர் அந்தஜோடியை, நக்சலைட் அமைப்பினர் தேடிப்பிடித்தனர். இதையடுத்து கங்கனுார் அருகிலுள்ள இந்தினார் கிராமத்தில் நடந்தநக்சலைட் நீதிமன்ற விசாரணைமுடிவில், இருவரையும் கொலைசெய்வதென முடிவானது.

பின்னர் அவர்களை அந்த அமைப்பினரே கொடூரமாக கொலை செய்தனர். இதுபோல், அதே பகுதியில் மற்றொரு நபரையும் நக்சலைட்கள் கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி.சுந்தர்ராஜ் கூறும்போது, “காதல்ஜோடியை நக்சலைட் அமைப்பினரே கொலை செய்தது தெரியவந்துள்ளது. தப்பியோடிய காதல்ஜோடியை கண்டுபிடித்து அழைத்து வந்த இந்தினார் கிராமத்தில் மக்கள் நீதிமன்றத்தை நடத்தினர். அதில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 3-வதாக கொல்லப்பட்ட நபரின்அடையாளம் தெரியவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in