

ஒமைக்ரான் வைரஸ் குறைந்த தீவிரம் கொண்டதாக தோன்றி னாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூணம் கேத்ரபால் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில்கரோனா பரவி வருவதால் பொதுசுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் குறைந்த தீவிரம் கொண்டதாக தோன்றினாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனை மிதமானது என நிராகரித்து விடக்கூடாது. தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனத்தும் அனைவராலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க அதிகாரிகள் அந்தந்த சூழ்நிலை அடிப்படையிலான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். அதிகாரிகளின் உத்தரவுக்கு மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, இருமல் ஏற்படும்போது வாயை மூடிக்கொள்வது, காற்றோட்டமான இடத்தில் இருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவை அவசியம்.
கரோனா வைரஸ்களில் முதன்மையானதாக ஒமைக்ரான் உருவாகி வருகிறது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் ஏற்கெனவே உலகெங்கிலும் சுகாதாரஅமைப்புகளுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது. இத்தொற்றுஏற்பட்டவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்படுவதையும் உயிரிழப்பதையும் நாங்கள் காண்கிறோம்.
ஒவ்வொரு கரோனா தொற்றும் ஒமைக்ரான் தொற்று அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். டெல்டா உள்ளிட்ட பிற வகை வைரஸ்களும் புழக்கத்தில் உள்ளன. அவை நாம் அறிந்தவாறு, கடுமையான நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்புக்கு காரணமாகின்றன.
நெருங்கிய தொடர்பில் இருப்ப வர்களிடம் எடுத்துக்காட்டாக உரையாடல் தூரத்தில் இருப்பவர்களிடம் தான் கரோனா வைரஸ் பரவுகிறது. காற்றோட்டம் இல்லாத உட்புற இடங்கள் மற்றும் நெரிசலான இடங்களிலும் வைரஸ் பரவலாம்.
பெரும்பாலும் நோய்த் தொற்றுஉள்ளவர்கள் எப்போதும் அறிகுறிகளை கொண்டிருக்கமாட்டார்கள். நோயை கொண்டு செல்கிறோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். எனவே உட்புற இடத்தை பகிர்ந்து கொள்ளும்போது ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறப்பதன் மூலம் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்வது முக்கியம்.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ