

மும்பையில் ஆக்சிஜன் படுக் கையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளில் 96% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூடபோடாதவர்கள் என தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மும்பை மாநகர ஆணையர் இக்பால் சஹல் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மும்பையில் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட 186 மருத்துவமனைகளில் மொத்தம் 1,900 கரோனா நோயாளிகள் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களில் 96 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. மாநகராட்சி வசம் இப்போது 21 லட்சம் டோஸ் தடுப்பூசி உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு இடையிலான இடைவெளி 84 நாட்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை, தடுப்பூசியை விரைந்து செலுத்து வதற்கு தடையாக உள்ளது. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் விகிதம் அதிகமாக உள்ளது.
பொதுமக்கள் ஒமைக்ரான் வைரஸ் பரவலை சாதாரண காய்ச்சல் என்று சாதாரணமாக நினைக்கக் கூடாது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ