வெளிநாடுகளில் இருந்து தெரசா அறக்கட்டளை நன்கொடை பெற அனுமதி
அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி (எம்ஓசி)’ என்ற அறக்கட்டளை அமைப்பு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு நன்கொடைகளை பெற்று பல்வேறு சமூகப் பணிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. இந்தியாவில் இயங்கும் அரசுசாரா அமைப்புகள், வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் (எப்சிஆர்ஏ) அனுமதி பெறுவது அவசியம்.
இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அறக்கட்டளை களுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் பணியை மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் மேற்கொண்டது. அதில் உரிய ஆவணங்களை சமர்பிக்காத அறக்கட்டளைகளுக்கான எப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் அன்னை தெரசா அறக்கட்டளையும் ஒன்று.
அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டதால் இந்த விவகாரம் பூதாகரமானது. இதற்கு, அறக்கட்டளை கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நட வடிக்கை எடுத்ததாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், அனைத்து ஆவணங்களையும் அறக் கட்டளை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து அதன் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ
