Published : 09 Jan 2022 07:31 AM
Last Updated : 09 Jan 2022 07:31 AM

73 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்; வன்முறை தூண்டும் வலைதளங்கள் முடக்கம்: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் தகவல்

போலியான அதேசமயம் வன்முறையைத் தூண்டக் கூடிய சமூகவலைதளங்களின் கணக்குகளைமத்திய அரசு முடக்கியுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களான ட்விட்டர், யூ-டியூப், ஃபேஸ்புக்உள்ளிட்டவை வாயிலாக வன்முறை மற்றும் காழ்ப்புணர்வைத் தூண்டக் கூடிய தகவல்களைப் பரப்பும் மற்றும் சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாகவும், இத்தகையவலைதளங்களை செயல்படுத் தியவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து போலியான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியானது. கார்ட்டூன் கதாபாத்திரங்களைக் கொண்ட வீடியோ காட்சிகள் பிரதமருக்கு எதிரான கருத்துகளை பரப்புவது போன்றும் அவரது பதவிக்குரிய பெருமையை கீழ்மைப்படுத்தும் வகையில் இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண் கருத்துகள் தெரிவிப்பது போன்று படமாக்கப்பட்டு அது சமூக வலைதளங்களில் பரவியது.

இத்தகைய வலைதளங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அது எத்தகைய நடவடிக்கை என்பது குறித்து பரிசீலிக்கபட்டு இறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

டிசம்பர் 2020 முதல் பொது வெளியில் பிரதமருக்கு எதிரான கருத்துகள் உள்ளிட்டவை பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து நேற்று முன்தினம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இதுகுறித்து அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்றுசெய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘மத்திய அரசு உரியநடவடிக்கைகளை சட்டபூர்வமாக எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.73 ட்விட்டர் கணக்குகள், 4 யூ-டியூப் வீடியோ பதிவுகள் மற்றும் ஒரு இன்ஸ்டாகிராம் விளையாட்டு உள்ளிட்ட காட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன’’ என்றார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடர்பாக மாதிரியாக மேற்கொள்ளப்பட்ட வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அமைச்சரவைக் கூட்டம் சீக்கிய சமூகத்துக்கு எதிரான முடிவுகளை எடுப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மத்திய அரசு புதிதாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் குறைதீர் அதிகாரிகளை நிர்வகிப்பதோடு, தவறான தகவல்களை பரப்பும் பயனர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x