

பதான்கோட் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளித்ததன் மூலம் பாரதத் தாயின் முதுகில் குத்தி விட்டனர் பாஜக-வினர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் எம்.ஜே.அக்பர் இது குறித்து ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்குக் கூறியதாவது:
“கேஜ்ரிவால் தனது அறிவின்மையை அவர் வாயாலேயே வெளிப்படுத்திக் கொண்டார், அயல்நாட்டுக் கொள்கைகள் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளில் உள்ள சிக்கலான வரலாறு அதன் நுட்பங்கள் ஆகியவை குறித்த அறியாமையை கேஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்” என்றார்.
பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு உட்பட கூட்டு விசாரணைக் குழு இந்தியா வந்து விசாரணை நடத்தியது. ஆனால் இந்த கூட்டு விசாரணைக் குழு கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தது என்னவெனில், பதான்கோட் தாக்குதலை அரங்கேற்றிய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய பிரச்சாரத்தைத் தூண்டி விட்டுள்ளது என்று கூறியிருந்தது.
ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு இந்தியாவில் அரங்கேறும் பயங்கரவாதத்தில் பங்களிப்பு செய்துவரும் நிலையில் அந்த அமைப்பு உள்ளடங்கிய விசாரணைக் குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாமா என்று கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அவர் தொடர் ட்வீட்களில் பாஜகவை கடுமையாகத் தாக்கினார், “பாரத் மாதா கி ஜெய் என்று பாஜக/ஆர்.எஸ்.எஸ். கோஷமிட்டாலும் ஐ.எஸ்.ஐ அமைப்பை இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்ததன் மூலம் பாரத மாதாவின் முதுகில் குத்தி விட்டனர்.
இது வெட்கக் கேடானது. பாகிஸ்தான் முன்னிலையில் இந்தியாவுக்கு முதல் முறையாக ஒரு பிரதமர் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார். நாட்டு மக்களிடம் பிரதமர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.