

புதுடெல்லி: பெண்களை ஆயுதப்படைகளில் சேர்க்கும் விதமாகவும், தேசப் பாதுகாப்பிற்கு பெண்கள் பங்களிப்பு செய்யும் வாய்ப்பை அளிக்கும் விதமாகவும் 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்களை இந்திய ராணுவத்தில் அல்லது தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவற்றை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது சைனிக் பள்ளிகள். சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் இது நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 33 இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சைனிக் பள்ளிகளில் நடைபெற்ற காணொலிக் கருத்தரங்கில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அவர் தனது உரையில், ''சைனிக் பள்ளிகளில் மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்திருப்பது மற்றும் பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என அரசு நம்புகிறது.
புதிய சைனிக் பள்ளிகளைத் திறப்பது என்ற முடிவு, நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற தங்களது கனவை நனவாக்க பெண்களுக்கு ஊக்கமளிக்கும். நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு முக்கிய முடிவுகளின் ஒரு பகுதியாகவே, சைனிக் பள்ளிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளை, நாட்டின் தகுதிவாய்ந்த குடிமக்களாக மாற்றுவதில் சைனிக் பள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமிட, நாட்டின் இளைஞர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குழந்தைகளை, கல்வி அறிவுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தார்மீக மற்றும் ஆன்மிக அடிப்படையிலும் மேம்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தி வந்த சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் தொலைநோக்குச் சிந்தனைகளை சைனிக் பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. இது பாராட்டக்குரியது" என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.