

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியிருந்த போதிலும் இன்று நடந்த மேயர் தேர்தலில் திடீர் திருப்பமாக பாஜக வெற்றி பெற்றது.
பஞ்சாப் - ஹரியாணா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சியைக் கையில் வைத்துள்ள பாஜக 12 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 8 இடங்களிலும், அகாலிதளம் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.
இதனைத் தொடர்ந்து வார்டு கவுன்சிலர்கள் ஒன்று கூடி இன்று மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்தனர். மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஞ்சு கத்யால், பாஜக சார்பில் சரப்ஜித் கவுர் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.
இரு வேட்பாளர்களும் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 35 எம்சி தொகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், போட்டியிலிருந்து விலகியது. வாக்கெடுப்பைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தது.
ஆம் ஆத்மிக்கு 14 கவுன்சிலர்கள் இருப்பதால் அந்தக் கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்தன.
காங்கிரஸ் சார்பில் கவுன்சிலராகத் தேர்வான சண்டிகர் முன்னாள் காங்கிரஸ் துணைத் தலைவர் தேவிந்தர் பாப்லாவின் மனைவி ஹர்பிரீத் கவுர் பாப்லா பாஜகவில் இணைந்தார். இதுமட்டுமின்றி சண்டிகர் நகர மேயரும் தேர்தலில் வாக்களிக்கலாம். தற்போது பாஜக எம்.பி.யான கிரென் கெர் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைப்படி பாஜக மற்றும் ஆம் ஆத்மிக்கு தலா 14 வாக்குகள் இருந்ததால் சமமான போட்டி இருந்தது. ஆனால், அதற்கு மாறாக பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவின் சரப்ஜித் கவுருக்கு 14 வாக்குகளும், கத்யாலுக்கு 13 வாக்குகளும் கிடைத்தன. ஆம் ஆத்மியின் ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜகவின் சரப்ஜித் கவுர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முடிவு வெளியானதும், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். மாநகராட்சியில் மிகப்பெரிய கட்சியாக மாறிய ஆம் ஆத்மி கட்சி மேயர் தேர்தலில் தோல்வியடைந்தது அக்கட்சித் தொண்டர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.